தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த படுதோல்வி மற்றும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிர்ச்சிக்கு மத்தியில், கட்சியில் மீண்டும் ஒரு பெரும் உட்கட்சி யுத்தம் வெடித்துள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னணி நிர்வாகிகளான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி, அதிமுக தற்போது இரு பிரிவாகப் பிளவுபட்டு நிற்கிறது. கட்சியில் தங்களது அதிகாரத்தை நிலைநாட்டவும், தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றவும் இரு தரப்பினரும் தீவிரமாக காய் நகர்த்தி வருவது தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிகார மோதல் தற்போது சட்டமன்றத்திற்குள்ளும் எதிரொலித்துள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவாக சட்டமன்றத்தில் வேலுமணி தரப்பைச் சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. இது கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவை மீறிய செயல் எனக்கூறி, அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆளுநர் மற்றும் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். இதற்குப் பதிலடியாக, கொறடா விஜயபாஸ்கரின் உத்தரவை மீறி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேர் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக வாக்களித்துள்ளதாக வேலுமணி தரப்பும் சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளது. இந்த இருதரப்பு மனுக்கள் மீதும் சட்டப்படி உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு அதிரடியாக நீக்கி வருகிறார். ஆனால், “கட்சியில் பிளவு நிலவி வரும் இந்தச் சூழ்நிலையில் எங்களை நீக்கியது செல்லாது” என்று வேலுமணி தரப்பினர் சவால் விடுத்துள்ளனர். அத்துடன், கட்சியின் பொதுக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதிமுகவின் விதிமுறைகளின்படி (பைலா), ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தால் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பதால், எஸ்பி வேலுமணி தரப்பு இந்த வழியைத் கையில் எடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்று அதனை எடப்பாடி பழனிசாமி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேலுமணி தரப்பு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இந்த வியூகத்தை முறியடிக்கும் நோக்கில், வேலுமணி தரப்பு கேட்டால் யாரும் பொதுக்குழுவை கூட்ட ஆதரவாக கையெழுத்திடக் கூடாது என்று தனது ஆதரவாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கறாரான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மேலும், அவரும் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதால், அதிமுகவின் இந்த உட்கட்சிப் பூசல் நாளுக்கு நாள் மேலும் வலுவடைந்து வருகிறது.
