‘ஜெயிலர் 2’ அலப்பறை ஆரம்பம்… காசி தியேட்டரில் செம வைப்.. ரசிகர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த்…. வைரலாகும் வீடியோ….!

By Nanthini on ஐப்பசி 15, 2026

Spread the love

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் இன்று (அக்டோபர் 15) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இப்படத்தின் வருகையைத் தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் கட்அவுட்கள், பேனர்கள் வைத்தும், தியேட்டர்களில் பட்டாசுகள் வெடித்தும் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, சென்னை காசி திரையரங்கில் நடைபெற்ற சிறப்பு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

   

காசி தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே ரஜினியின் பிரம்மாண்ட எல்.இ.டி (LED) கட்-அவுட்டை சௌந்தர்யா ரஜினிகாந்த் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, திரையரங்கிற்கு வெளியே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுடனும், பெண் ஆட்டோ ஓட்டுநர்களுடனும் இணைந்து ‘ஜெயிலர் 2’ படத்தின் உற்சாகப் பாடலுக்கு அவர் குத்தாட்டம் போட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சௌந்தர்யாவின் இந்த அதிரடி நடனமும், எளிமையான ஈடுபாடும் அங்கிருந்த ரசிகர்களின் ஆரவாரத்தை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

   

மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, யு/ஏ சான்றிதழுடன் இன்று வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அதிரடி ஆக்‌ஷன் விருந்தாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் முதல் ஒரு வாரத்திற்கு காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், திரையரங்கங்கள் அனைத்தும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளன.