தமிழத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த மாபெரும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, வெங்கட ரமணன் மற்றும் விஜய் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மேயர் பிரியா, முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான சேகர்பாபு மற்றும் தவெக எம்.எல்.ஏ விஜய் தாமு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் சேகர்பாபு பேசிக்கொண்டிருந்தபோது, தவெக எம்.எல்.ஏ விஜய் தாமு “போர் அடிக்கிறது” என்று கமெண்ட் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த சேகர்பாபு, மேடையிலேயே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். “உங்களுக்கு போர் அடிக்கிறது என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்? நான் என்ன அநாவசியமாகப் பேசிக்கொண்டிருக்கிறேன்? பிறகு எதற்கு என்னை இங்கு அழைத்தீர்கள்?” என்று அவர் காட்டமாகப் பேசினார்.
உடனே அருகில் இருந்த அமைச்சர் விஜய் பாலாஜி உள்ளிட்டோர் தலையிட்டு அவரைச் சமாதானப்படுத்தினர். அதன் பிறகு பேசிய சேகர் பாபு, “நாங்கள் எதையும் குற்றச்சாட்டாகக் கூறவில்லை. ஜனநாயக முறையில் அழைத்துவிட்டார்கள் என்பதற்காகவே வந்தோம்; எங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். நான் ஐந்தாவது முறை எம்.எல்.ஏவாக இருக்கிறேன்; சிறுவயதிலிருந்தே இதே பணிகளுக்காகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறேன்” என்று விளக்கமளித்தார்.
மேலும் பேசிய அவர், “வருகின்ற புயல் அதிக வெப்பத்தாக்கத்தையும் காற்றழுத்தத்தையும் கொண்டு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த மழைநீர் வடிகால் பணிகளைச் சரியாகச் செய்தால் மட்டுமே வெள்ளத்தை நம்மால் திறம்பட சமாளிக்க முடியும்” என்றும் அறிவுறுத்தினார். கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கனமழை எச்சரிக்கையைச் சுட்டிக்காட்டி, முதலமைச்சரின் உத்தரவின்படி மண்டல அளவில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
