சென்னை அருகே மாங்காடு பகுதியில், செல்போன் பேச்சால் ஏற்பட்ட சந்தேகத்தால் இளம்பெண் ஒருவர் கணவரால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டூரைச் சேர்ந்த முஜைதீன் (30) – சோபியா (26) தம்பதிக்குத் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகும் நிலையில், 7 வயதில் ஒரு மகனும் உள்ளார். கறிக்கடையில் வேலை பார்த்து வந்த முஜைதீன், கடந்த சில நாட்களாகத் தன் மனைவி செல்போனில் நீண்ட நேரம் பேசுவதைக் கண்டு சந்தேகம் அடைந்துள்ளார். இது தொடர்பாகக் கேட்டபோது சரியான பதில் வராததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவும் சோபியா வேறொரு ஆணுடன் நீண்ட நேரம் போனில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முஜைதீன், இனிமேல் போனில் பேசக்கூடாது என்று கண்டித்துள்ளார். எனினும் சோபியா தொடர்ந்து பேசியதால், கட்டுக்கடங்காத கோபமடைந்த முஜைதீன் வீட்டில் இருந்த கறி வெட்டும் கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சோபியா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி இறந்ததை உறுதி செய்த பின் முஜைதீன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
தகவலறிந்து வந்த மாங்காடு காவல்துறையினர் சோபியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான முஜைதீனைத் தீவிரமாகத் தேடி வந்த போலீசார், மாங்காடு பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சிறிய சந்தேகமும், செல்போன் உரையாடலும் ஒரு குடும்பத்தின் அமைதியைச் சீர்குலைத்து, 7 வயது சிறுவனைத் தாயையும் இழந்து, தந்தையும் சிறைசெல்லும் பரிதாப நிலைக்குத் தள்ளியுள்ளது.
ஏற்கனவே இதே மாங்காடு பகுதியில் கடந்த 26-ஆம் தேதி காதலிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் யுவனேஷ் என்ற வாலிபர் நண்பர்களாலேயே அடித்துக்கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டார். அந்தச் சூடு தணிவதற்குள், அதே பகுதியில் செல்போன் சந்தேகத்தால் இளம்பெண் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து நடைபெறும் இது போன்ற கொடூர குற்றச் சம்பவங்கள், சென்னை புறநகர்ப் பகுதிகளில் சட்டஒழுங்கு குறித்த அச்சத்தையும் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
