பீகாரில் அரங்கேறிய இந்த விசித்திரமான காதல் கதை, கேட்போரைக் திகைக்க வைத்துள்ளது. அங்குள்ள சிக்கந்தர் யாதவ் என்பவருக்கும், கீதா தேவி என்பவரின் மகளுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், எதிர்பாராதவிதமாக சிக்கந்தரின் மனைவி உயிரிழந்தார். மனைவியின் மரணத்திற்குப் பிறகு, மாமியார் கீதா தேவியின் வீட்டிலேயே சிக்கந்தர் தங்கி வாழத் தொடங்கினார். துக்கத்திலும் தனிமையிலும் இருந்த இருவருக்கும் இடையே காலப்போக்கில் ஒரு புதிய நெருக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது.
மாமியார் மற்றும் மருமகனின் இந்த விசித்திரமான காதல் விவகாரம், குடும்பத்தினருக்கும் கிராம மக்களுக்கும் தெரியவந்தபோது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் பஞ்சாயத்து வரை சென்றது. ஊர் மக்கள் முன்னிலையில் கூடிய பஞ்சாயத்தில், சிக்கந்தரும் கீதா தேவியும் தங்களுக்குள் இருக்கும் காதலை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதோடு, இனிவரும் காலங்களில் இருவரும் இணைந்தே வாழ விரும்புவதாகவும் தைரியமாகத் தெரிவித்தனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பஞ்சாயத்தார் மற்றும் கிராம மக்களுக்கு, அதைவிட ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. கீதா தேவியின் கணவர் (அதாவது சிக்கந்தரின் மாமனார்) இந்தத் திருமணத்திற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தார். அதுமட்டுமன்றி, ஒரு படி மேலே சென்று, தனது சொந்த மனைவிக்கே ‘கன்னியாதானம்’ செய்து, தன் மருமகனுக்கு முறைப்படி திருமணம் செய்து வைத்தார். இந்த விசித்திரத் திருமணம் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
