“மண்டபத்தில் ஓடிய ரத்த ஆறு” சமாதானம் பேச வந்த மாமியாரின் ஆட்களை வெட்டிச் சாய்த்த மருமகன்.. திருப்பதி கல்யாண மண்டபத்தில் அரங்கேறிய இரட்டைக் கொலை பயங்கரம்..!!

By Swetha on ஆடி 10, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் திருப்பதி திருச்சானூர் சாலையில் உள்ள பத்மாவதி கல்யாண மண்டபத்தில் புதன்கிழமை இரவு நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில், முனிரத்னம் ரெட்டி மற்றும் மணிகண்டா ஆகிய இருவர் கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். குடும்பத் தகராறு காரணமாகப் பிரிந்து வாழும் சுனில் என்பவரிடம், அவரது மாமியார் தரப்பு ஆதரவாளர்களான இவர்கள் இருவரும் சமாதானம் பேச முயன்றபோது ஏற்பட்ட வாக்குவாதமே இந்த இரட்டைக் கொலைக்குக் காரணமாக மாறியுள்ளது.

மனைவியை பிரிந்து வாழ்ந்துவிட்டு வேறு திருமண நிகழ்ச்சிக்கு வந்தது குறித்து முனிரத்னம் ரெட்டி மற்றும் மணிகண்டா கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த சுனில் மற்றும் அவரது உறவினர்கள், மறைத்து வைத்திருந்த கத்திகளால் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் முனிரத்னம் ரெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, மணிகண்டா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். கல்யாண மண்டபத்தில் கண் இமைக்கும் நேரத்தில் அரங்கேறிய இந்தத் கொடூரத் தாக்குதல் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

தகவலறிந்து வந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் பக்தவத்சலம் தலைமையிலான போலீசார் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், திருப்பதி நகரின் எல்லைகளை மூடி தீவிர வாகன சோதனை நடத்திய போலீசார், கொலை செய்துவிட்டு தப்பியோட முயன்ற முதன்மைக் குற்றவாளி சுனில் மற்றும் அவரது உறவினர்களை அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.