“முதலமைச்சர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு”… அமைச்சர் கீர்த்தனாவின் பதவிக்கு வருகிறதா ஆபத்து?… கோட்டையில் வெடித்த புதிய பரபரப்பு…!

By Nanthini on ஆடி 10, 2026

Spread the love

சமூக ஊடகங்கள் தற்போதைய அரசியல் நகர்வுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ள சூழலில், தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா குறித்த செய்திகள் தான் இப்போது இணையம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளன. கட்சிக்குள் நுழைந்த முப்பதே நாட்களில் சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ-வாகி, நேரடியாக அமைச்சர் நாற்காலியிலும் அமர்ந்து அசுர வளர்ச்சி கண்டவர் கீர்த்தனா. ஆனால், மிகக் குறுகிய காலத்தில் அவர் அடைந்த உயரத்தை விட, அடுத்தடுத்து அவர் சிக்கி வரும் தொடர் சர்ச்சைகள் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. தவெக அரசின் ஆரம்ப நாட்களிலேயே மாற்றுத்திறனாளிகள் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்டது, அரசு வாகனத்தைக் கட்சியினர் பயன்படுத்த அனுமதித்தது, தொழிலதிபர்களுக்கு ‘ரீல்ஸ்’ மூலம் அழைப்பு விடுத்தது என அவரது செயல்பாடுகள் தொடர் விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றன.

சக அமைச்சர் ஜெகதீஸ்வரியுடன் ஏற்பட்ட புரோட்டோகால் மோதல், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் குறித்த பேச்சு என முதலமைச்சர் அலுவலகத்தையே அப்செட் செய்த கீர்த்தனா, சமீபத்தில் திருத்தங்கல் அரசுப் பள்ளியில் ஆய்வின் போது மாணவியிடமும் ஆசிரியரிடமும் நடந்துகொண்ட விதம் அடுத்த புயலைக் கிளப்பியுள்ளது. ஆங்கிலக் கேள்விக்கு பதிலளிக்காத மாணவியைக் கடிந்து கொண்டதோடு, “இவரே இப்படி என்றால் கடைசி பெஞ்ச் எப்படி இருக்கும்” என அவர் பேசியது கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், “தான் ஒரு அரசுப் பள்ளி மாணவி” என கீர்த்தனா அளித்த விளக்கமும், அவர் படித்தது அரசு உதவி பெறும் பள்ளி தான் என்ற ஆதாரங்களுடன் நெட்டிசன்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.

   

கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இருக்கும்போது கீர்த்தனா ஏன் பள்ளிகளில் ஆய்வு செய்கிறார் என்ற அதிருப்தி சக அமைச்சர்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்யும் இதற்கு நேரடியாகவே முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகத் தெரிகிறது. கடந்த ஜூலை 7-ம் தேதி கோட்டையில் நடந்த முதலீட்டு நிகழ்ச்சியின் போது, “ரீல்ஸ் எடுப்பது உங்கள் வேலையல்ல, தொழில்துறை பணிகளில் கவனம் செலுத்துங்கள்” என்று முதலமைச்சர் விஜய், அமைச்சர் கீர்த்தனாவுக்கு நேரடியாகவே அறிவுரை வழங்கியதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் வரவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் கீர்த்தனா தன் பதவியை இழக்க நேரிடும் என தவெக சீனியர்கள் எச்சரிப்பதாகக் கூறப்படுகிறது.

   

இருப்பினும், முப்பது வயதே ஆன, அரசியலுக்குப் புதியவரான ஒரு பெண் அமைச்சர் நிர்வாகத்தைக் கற்றுக்கொள்ளக் கால அவகாசம் தேவை என்றும், அவரைத் தொடர்ந்து ட்ரோல் செய்வது முறையல்ல என்றும் ஆதரவுக் குரல்களும் ஒலிக்கின்றன. மேலும், எதிர்க்கட்சியான திமுகவின் விமர்சனங்களுக்காக உடனடியாக நடவடிக்கை எடுத்தால், அது எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு முதலமைச்சர் பணிந்துவிட்டார் என்ற தோற்றத்தை உருவாக்கிவிடும் என்ற அரசியல் கணக்கும் உள்ளது. புதிய கட்சியின் ஆட்சி நடக்கும்போது மக்களின் கவனம் ஒட்டுமொத்த அரசின் மீதுதான் இருக்கும் என்பதால், அமைச்சர் கீர்த்தனா தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்த்து, தனக்கு ஒதுக்கப்பட்ட தொழில்துறையில் முழு கவனம் செலுத்த வேண்டியது தற்போதைய அவசியமாகிறது.