கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நச்சலூர் தாட்கோ காலனி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (47). விவசாயக் கூலி தொழிலாளியான இவருக்கு, பூவாயி என்ற மனைவியும், ஹரிதா என்ற திருமணமான மகளும், மணிகண்டன் (21) என்ற மகனும் உள்ளனர். எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த மணிகண்டன், தனது பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். கூலித்தொழில் செய்து குடும்பத்தை கவனித்து வந்த மோகன்ராஜ், நாளடைவில் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. இதனால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி, மகன் மற்றும் அக்கம் பக்கத்தினருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
வழக்கம் போல கடந்த மே 21-ஆம் தேதியன்றும் மோகன்ராஜ் நள்ளிரவில் மதுபோதையில் வீட்டிற்கு வந்து மனைவி பூவாயியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையேயான தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மோகன்ராஜ் மனைவி பூவாயி மீது மிளகாய்ப் பொடியைத் தூவி, அவரைத் தாக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த மகன் மணிகண்டன், தந்தையைத் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், போதை தலைக்கேறியிருந்த மோகன்ராஜ், மகனின் பேச்சைக் கேட்காமல் இருவரையும் கொடூரமாகத் தாக்கியதாகத் தெரிகிறது.
தொடர்ந்து தந்தை நடத்திய தாக்குதலிலிருந்து தாயைக் காப்பாற்ற நினைத்த மணிகண்டன், அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மோகன்ராஜின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மோகன்ராஜ், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மோகன்ராஜ் தாக்கியதில் காயமடைந்த பூவாயி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே, நீண்ட நேரமாக மோகன்ராஜ் ஒரே இடத்தில் கிடந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், அருகில் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்து கிடப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
இதுகுறித்து மோகன்ராஜின் உறவினர்கள் அளித்த தகவலின் பேரில், நங்கவரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குற்றவாளிகளான பூவாயி மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவர்கள் தப்பிச் செல்லாதவாறு போலீசார் அங்கு பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தாயைக் காப்பாற்ற மகன் தந்தையையே அடித்துக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
