தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வதற்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இதற்கு முன்னதாக அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை இருந்த நிலையில் தற்போது அதனை விஜய் களத்தில் இறங்கி முற்றிலுமாக மாற்றியுள்ளார். இதனால் 2026 தேர்தல் களம் யாருக்கானது என்பது பரபரப்பாகவே பார்க்க படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் புதிதாக அரசியலில் களம் இறங்கியுள்ள விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் முதல்வர் வேட்பாளர் விஜய் தான், யாருடனும் கூட்டணி கிடையாது என்று சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் வேல்முருகன், தனியரசு, தமிமுன் அன்சாரி இணைந்து சமூக நல்லிணக்க கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இது தொடர்பாக மூவரும் நேற்று சந்தித்து ஆலோசனையை நடத்திய போது தமிழ்நாட்டில் வாழும் ஜாதி -சமூகங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை வளர்ப்பது தொடர்பாகவும் அவர்களுக்கு மத்தியில் தமிழர் ஒற்றுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் விவாதித்துள்ளனர். இதில் பல சமூக தலைவர்களை இணைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
