மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை படுக்கையில்தான் கழிக்கிறார்கள். எனவே, நாம் பயன்படுத்தும் படுக்கை விரிப்பு மற்றும் தலையணை உறைகளை சுத்தமாக வைத்திருப்பது நல்ல தூக்கத்திற்கும் உடலாரோக்கியத்திற்கும் மிக அவசியமானது. படுக்கையை நீண்ட நாட்கள் துவைக்காமல் பயன்படுத்தும்போது, அதில் உடலின் எண்ணெய், வியர்வை, இறந்த சரும செல்கள், தூசிப் பூச்சிகள், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் ஆகியவை படியத் தொடங்குகின்றன. இதன் காரணமாக தோல் அரிப்பு, ஒவ்வாமை , முகப்பரு, மூச்சுத்திணறல், துர்நாற்றம் மற்றும் நிம்மதியற்ற தூக்கம் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இந்த ஆரோக்கியப் பிரச்சினைகளைத் தவிர்க்க, படுக்கை விரிப்புகளை வாரம் ஒருமுறை கட்டாயம் துவைக்க வேண்டும். குறிப்பாக, அதிகமாக வியர்ப்பவர்கள், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் 3 நாட்களுக்கு ஒருமுறை துவைப்பது நல்லது. அதேபோல், முகத்தோடு நேரடியாகத் தொடர்பில் இருக்கும் தலையணை உறைகளை 3 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் அல்லது அதிகபட்சமாக வாரம் ஒருமுறையாவது துவைத்து சுத்தம் செய்வது அவசியமாகும்.
படுக்கைத் துணிகளைத் துவைக்கும்போது வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்துத் துவைப்பது சிறந்தது; இது துணிகளில் படிந்திருக்கும் கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் முழுமையாக அழிக்க உதவுகிறது. சளி, காய்ச்சல், ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் படுக்கை விரிப்புகளை அடிக்கடி துவைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு படுக்கையினைத் தூய்மையாகப் பராமரிப்பதன் மூலம் கிருமிகளின் தாக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதோடு, ஆழ்ந்த தரமான தூக்கத்தையும், சிறந்த உடல் ஆரோக்கிய மாற்றத்தையும் பெற முடியும்.
