மும்பையிலிருந்து ஹவுரா நோக்கிச் செல்லும் அதிவேக துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அதன் ஒரு பகுதியிலிருந்து அடர்ந்த புகை வெளியேறிய சம்பவம் பயணிகளிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சுமார் 12 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்ட இந்த ரயிலில், திடீரெனப் புகை மூட்டம் ஏற்பட்டதைக் கண்ட பயணிகள் அச்சமடைந்து, உடனடியாக அதைக் கேமராவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். ரயிலின் பேண்ட்ரி கார் பகுதியிலிருந்து புகை வந்ததாகக் கூறப்படும் நிலையில், இதற்கான காரணம் என்னவென்று ரயில்வே நிர்வாகத்திடம் பயணிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“அதிகக் கட்டணம் செலுத்திப் பயணிக்கும் சாமானிய மக்களின் நேரத்திற்கும் பாதுகாப்பிற்கும் இந்திய ரயில்வேயில் மதிப்பே இல்லையா?” என்று இணையவாசிகள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். இச்சம்பவம் குறித்த தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் ரயிலை நிறுத்தி, தகுந்த சோதனைக்குப் பிறகே ரயிலை மேலதிக பயணத்திற்கு அனுமதித்துள்ளனர்.
