ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள புகழ்பெற்ற ஆந்திரா மருத்துவக் கல்லூரியில் பயிலும் முதுகலை மருத்துவ மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொள்ளும் அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 3 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் சின்னவால்டேர் பகுதியில் உள்ள விடுதி அறையில் ஷ்ரவாணி என்ற மருத்துவ மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்துக் கண்ணீர் மல்கப் பேசிய அவரது தாய், “என் மகளைக் கடுமையான சித்ரவதைக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள்; அவர்கள் செய்த கொடுமையாலும் தாங்க முடியாத மன உளைச்சலாலும்தான் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள்” என அதிர்ச்சி குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.
ஒரே கல்லூரியில் அடுத்தடுத்து 3 மருத்துவ மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் விசாகப்பட்டினம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவக் கல்லூரியில் நிலவும் பணிச்சுமை, மூத்த மாணவர்களின் சித்ரவதை அல்லது ராகிங் காரணமாக இந்தத் தற்கொலைகள் நடக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
