தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய ‘ரிஷிவந்தியம்’ தொகுதியில் பிரேமலதா களமிறங்கக்கூடும் என்ற தகவல் தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருவது, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், தொகுதிப் பங்கீட்டின் போது ரிஷிவந்தியம் அல்லது விருத்தாசலம் ஆகிய தொகுதிகளை தேமுதிக கோர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இவை இரண்டுமே விஜயகாந்தின் அரசியல் வரலாற்றோடு பின்னிப்பிணைந்த தொகுதிகள் என்பதால், சென்டிமென்ட் அடிப்படையில் பிரேமலதா இவற்றுள் ஒன்றைத்தான் தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு திமுகவின் உள்ளூர் முக்கியப் புள்ளிகளுக்கு பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது.
தற்போதைய சூழலில் ரிஷிவந்தியம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக திமுகவின் ‘வசந்தம்’ கார்த்திகேயன் பதவி வகித்து வருகிறார். கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக செயலாளராகவும், கடந்த இரண்டு தேர்தல்களில் அத்தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்றவராகவும் இருக்கும் அவருக்கு, பிரேமலதாவின் வருகை பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. ஒருவேளை தொகுதிப் பங்கீட்டில் இத்தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டால், தனது அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலையில் அவர் ஆழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, தனது பிடியை வலுவாக வைத்திருக்கும் திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கணக்குகளுக்காக தங்களது கோட்டையை விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமோ என்று அஞ்சுகின்றனர். பிரேமலதாவின் இந்த அதிரடி நகர்வு, ரிஷிவந்தியம் தொகுதியில் ஆரம்பித்து ஒட்டுமொத்த திமுக – தேமுதிக உறவில் எந்த மாதிரியான திருப்பங்களை ஏற்படுத்தும் என்பதை அரசியல் விமர்சகர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
