தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர்களில் ஒருவர் சிவாஜி கணேசன். பி யு சின்னப்பா, எம் ஆர் ராதா, பாலையா என சிறந்த நடிகர்களின் வரிசையில் பராசக்தி மூலமாக அதிர்வலையை உருவாக்கியவர் சிவாஜி கணேசன். அதன் பிறகு 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிகர் திலகமாக வலம் வந்தார். ஆனால் அவருக்கு ஒரு முறை கூட நடிப்புக்கான தேசிய விருது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படிப்பட்ட சிவாஜியே நடிப்பில் தன்னுடைய முன்னோடியாக, ஆதர்சமாக நினைத்தவர்களில் ஒருவர் எம் ஆர் ராதா. நாடக உலகில் சிவாஜி, எம் ஜி ஆருக்கெல்லாம் சீனியரான ராதா, 1930 மற்றும் 40 களிலேயே சில படங்களில் நடித்தாலும், நாடகம் அளவுக்கு அவருக்கு சினிமா பிடிக்கவில்லை. அதனால் நாடகங்களிலேயே கவனம் செலுத்தினார்.
அதன் பிறகு பத்தாண்டுகளுக்குப் பிறகு 1954 ஆம் ஆண்டு ரத்தக் கண்ணீர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின்னர் அவருக்கு குணச்சித்திர நடிகராக மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்றால் அது சிவாஜியோடு அவர் இணைந்து நடித்த ‘பாகப்பிரிவினை’ திரைப்படம்தான். அந்த படத்தில் சிங்கபூரான் என்ற வேடத்தில் கலக்கி இருப்பார் ராதா. ராதாவை நம் படத்தில் போட்டால் அவரே நகைச்சுவை மற்றும் வில்லத்தனம் என இரண்டையும் பார்த்துக்கொள்வார் என அவரை எல்லா படத்திலும் புக் பண்ண ஆரம்பித்தனர்.
தமிழ் சினிமாவில் இரு பெரும் துருவங்களாக கோலோச்சிய எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி ஆகிய இருவருமே எம் ஆர் ராதாவை மரியாதையோடு ‘அண்ணன்’ என்றுதான் அழைப்பார்கள். அதே போல எம் ஆர் ராதாவும் அவர்களை ‘டேய் என்றோ பெயர் சொல்லியோதான் அழைப்பார்’. அந்தளவுக்கு ஆளுமை மிக்கவராக எம் ஆர் ராதா இருந்துள்ளார். நாடக உலகில் அவர்கள் இருவருக்கும் சீனியராக இருந்தவர் எம் ஆர் ராதா.
இந்நிலையில் எம் ஆர் ராதாவின் மகனான ராதாரவி சிவாஜி தன் தந்தையின் மேல் எவ்வளவு மரியாதை வைத்திருந்தார் என்பது குறித்து பேசியுள்ளார். ஒருமுறை சிவாஜிக்கு வெளிநாட்டில் ஏதோ விருது கொடுத்தார்கள். அதை வாங்க செல்வதற்கு முன்னர் அவர் எங்கள் வீட்டுக்கு வந்து அப்பா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி சென்றார்” என்று பகிர்ந்துள்ளார்.
அந்த நிகழ்வின் போது “என் நாடகக் கம்பெனியில் நடித்த ஒரு நடிகன், இன்று வெளிநாட்டுக்கு சென்று விருது வாங்குவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என அன் அம்மாவிடம் கூறி பெருமைப்பட்டார்” என்று ராதா பெருமிதப்பட்டாராம்.
