எம்ஜிஆர் பத்து படங்களில் கதாநாயகனாக நடித்து பெற்ற புகழை சிவாஜி கணேசன் ஒரே படத்திலேயே பெற்றுவிட்டார். பராசக்தி படம் வந்ததும் அவரை அடுத்தடுத்து பட வாய்ப்புகள் சூழ ஆரம்பித்தன. இதனால் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். அந்த நேரத்தில்தான் சிவாஜியிடம் தெலுங்கு பட தயாரிப்பாளரான ஸ்ரீராமுலு நாயுடு வந்து ‘மலைக்கள்ளன்’ படத்தைக் கூறி அதில் நடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அப்போது சிவாஜி “, அண்ணே நான் இப்போது 10 படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்களை முடித்துவிட்டு தான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும். அதுவுமில்லாமல் உங்கள் ஸ்டுடியோ கோயம்புத்தூரில் உள்ளது. என்னால் ஒரு படத்துக்காக அங்கு வந்து நடிக்க முடியாது.” என பணிவோடு மறுத்துள்ளார். அப்போது தயங்கிக் கொண்டிருந்த தயாரிப்பாளரிடம் “வேண்டுமென்றால் எம் ஜி ஆர் அண்ணனிடம் கேட்டுப் பாருங்கள்” என ஆலோசனைக் கூறியுள்ளார்.
அவரும் சென்று எம் ஜி ஆரை சந்திக்க அவர் “நான் இந்த படத்தில் நடிக்கிறேன். ஆனால் படத்துக்கு கருணாநிதிதான் வசனம் எழுதவேண்டும்” எனக் கூறியுள்ளார். தயாரிப்பாளர் இதுபற்றி கருணாநிதியிடம் கேட்ட போது “இது நாமக்கல் கவிஞரின் கதை. அவர் காங்கிரஸ் கட்சிக்காரர். நான் திராவிடம். அவர் கதையில் நான் வசனம் எழுதி எதாவது சிக்கல் வந்தால் இருவருக்குமே தர்மசங்கடமாக அமையும்” எனக் கூறி தவிர்க்கப் பார்த்துள்ளார்.
இந்த தகவல் எம் ஜி ஆர் காதுகளுக்கு வரவே தன்னுடைய நெருங்கிய நண்பரான கருணாநிதியிடம் சென்று இந்த படத்துக்கு வசனம் எழுத வேண்டும் எனக் கேட்டுள்ளார். அவரும் சம்மதித்துள்ளார். அப்படி உருவாகி 1954 ஆம் ஆண்டு வெளியான படம்தான் மலைக்கள்ளன். எம் ஜி ஆரின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்து அவரை வசூல் மன்னனாக்கியது.
