தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது, அவரை பராசக்தி படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார். கருணாநிதி கதை வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் படம் வெளியாகி அதுவரை காணாத வெற்றியைப் பெற்றது.
அந்த படம் அவருக்கு மட்டும் திருப்புமுனையாக அமையாமல் தமிழ் சினிமாவுக்கே ஒரு ட்ரண்ட் செட்டராக அமைந்தது. அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. 25 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகனாகவு, அதன் பிறகு 20 ஆண்டுகள் குணச்சித்திர நடிகராகவும் கலக்கினார்.
சிவாஜி கணேசன் 60 கள் மற்றும் 70 களில் தனது மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தார். அப்போது அவர் ஒரு நாளைக்கு மூன்று கால்ஷீட் எல்லாம் கொடுத்து இடைவேளையே இன்றி நடித்தார். அவ்வளவு பிஸியாக இருந்த அவர் ஒரு நாடகத்தைப் பற்றி கேள்விப்பட்டு அந்த நாடகத்தில் தான் நடித்தே ஆகவேண்டுமென பிடிவாதமாக இருந்து நடித்துமுள்ளார்
அந்த நாடகம் பின்னாளில் அவர் நடிப்பிலேயே வெளியாகி சூப்பர் ஹிட்டான தங்கப்பதக்கம் நாடகம்தான். மகேந்திரன் கதையில் உருவான இந்த நாடகத்தில் செந்தாமரை நடிக்க, நாடகம் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. அதைக் கேள்விப்பட்டு சிவாஜி அந்த நாடகத்தைப் பார்த்துள்ளார். பார்த்ததும் SP சௌத்ரி கதாபாத்திரம் அவருக்கு பிடித்து விடவே அந்த வேடத்தில் தான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். அந்த கதாபாத்திரம் உச்சபட்ச நேர்மைதான் சிவாஜிக்கு மிகவும் பிடித்ததாம். சௌத்ரி கதாபாத்திரம் தன்னுடைய நேர்மைக்காக கடைசியில் தன்னுடைய மகனையே சுட்டுக் கொல்வது போல உருவாக்கப்பட்டிருக்கும். அதில் சிவாஜி நடித்தது அந்த கதாபாத்திரத்தை வேறொரு கட்டத்துக்கு கொண்டு சென்றது.
அவரை சுற்றி இருந்தவர்கள் அனைவரும் “உங்களுக்கு என்ன பைத்தியமா? உங்கள் ஒரு நாள் சம்பளம் சினிமாவில் என்ன தெரியுமா? அதை விட்டுவிட்டு ஏன் நாடகத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்’ எனக் கேட்டுள்ளனர். ஆனாலும் அந்த நாடகம் பிடித்ததால் சிவாஜி, தன் சினிமா வேலைகளை எல்லாம் விட்டு அந்த நாடகத்தில் தொடர்ந்து நடித்தாராம். அதன் பின்னர்தான் அந்த நாடகம் படமாக்கப்பட்டு சிவாஜியின் கிரீடத்தில் மற்றுமொரு சிறகாக ஆனது.
