தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவர்களில் ஒருவர் பாண்டியராஜன். இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர். கன்னிராசி மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பாண்டிராஜனின் இரண்டாவது படம் ஆண்பாவம். பாண்டியனோடு அவரும் ஒரு கதாநாயகனாக அந்த படத்தில் நடித்திருந்தார். அண்ணன் தம்பியான பெரிய பாண்டி, சின்ன பாண்டி ஆகியவர்களின் குறும்புத்தனமான வாழ்க்கையில் திருமணம் குறுக்கிடும்போது ஏற்படும் குழப்பங்களும், அதன் பின்னான முடிவுகளுமே இந்த படத்தின் கதை.
இந்த படத்தின் வெற்றி அவரை தமிழ் சினிமாவில் ஒரு மினிமம் கியாரண்டி ஹீரோவாக்கியது. அதன் பின்னர் 10 ஆண்டுகள் அவர் தமிழ் சினிமாவில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஒரு கட்டத்தில் இயக்குனர் மணிரத்னம் வாய்ப்பில்லாமல் இருந்த போது அவருக்கு சான்ஸ் தரும் அளவுக்கு பாண்டியராஜன் வளர்ச்சி இருந்தது.

#sivaji ganesan and pandiarajan
இந்நிலையில் அவர் சிவாஜிகணேசனோடு இணைந்து தாய்க்கு தாலாட்டு என்ற படத்தில் நடித்தார். அந்த படம் வெற்றிபெற்ற ஒரு மலையாளப் படத்தின் ரீமேக். அந்த படத்தில் பாண்டியராஜன் ஹீரோவாக நடிக்க, அவரின் தந்தையாக சிவாஜி கணேசன் நடித்திருந்தார்.
இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பற்றி பாண்டியராஜன் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “அந்த படத்தின் ஷுட்டிங்கில் எனக்கும் சிவாஜி சாருக்கும் சேர்ந்தார் போல ஒரு சீன் வந்தது. அந்த காட்சியில் எனக்குத் தெரியாமல் என் தங்கச்சிக்கு கல்யாணம் ஏற்பாடு ஆகியிருப்பதை அறிந்து நான் சிவாஜி சாரிடம் ஒரு நீண்ட வசனத்தைப் பேசவேண்டும்.
நான் ஏற்கனவே அவர் மேல் பிரமிப்பில் இருந்தேன். அதனால் படபடவென வேகமாக வசனத்தைப் பேசிவிட்டேன். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவாஜி ஒரு கெட்ட வார்த்தையை சொல்லி “நீ பேசுனது ஒன்னுமே புரியலடா” என திட்டிவிட்டார். அப்புறம் அவர் சொல்லிக் கொடுத்தது மாதிரி நான் பேசினேன்” எனக் கூறியுள்ளார்.
