மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் ராவ் (Rau) பகுதியில் 21 வயதான இளம் பெண் ஒருவர், அவரது அண்ணியால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட பார்வதி பாய் குஷ்வாஹா என்பவரின் சகோதரர் குறித்து, கொல்லப்பட்ட பெண் ஏதோ ஒரு கருத்தைக் கூறியதாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த பார்வதி பாய் கத்தியால் தாக்கியதில் அந்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பார்வதி பாயைக் கைது செய்ததுடன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனிடையே, இச்சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள பயனர்கள், “இந்தியாவில் இதுபோன்ற கொடூரமான குற்றங்களைச் செய்ய மனிதர்கள் அஞ்சுவதில்லை; குற்றவாளிகளுக்கு விரைவாகத் தூக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும்” எனத் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.
