சினிமா மற்றும் இசைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பாடகி மற்றும் தொழிலதிபரான ஸ்வாகதா கிருஷ்ணனின் அண்மைய பேட்டி. பிக் பாஸ் பிரபலம் மாயா கிருஷ்ணனின் அக்காவான இவர், சென்னையில் உள்ள ஒரு முன்னணி இசையமைப்பாளரின் ஸ்டுடியோவில் பணியாற்றியபோது தனக்கு நேர்ந்த கொடூரமான பாலியல் அத்துமீறல்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். ஒரு காலத்தில் 250-க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களைப் பாடிய இவர், இந்த கசப்பான அனுபவத்தால் தான் நேசித்த இசைத்துறையை விட்டே விலகி, கடந்த ஆறு ஆண்டுகளாக ரிஷிகேஷில் வசித்து வருவதாகக் கூறியுள்ளார்.
தன்னுடைய காதல் முறிவு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து மீள வேலைக்குச் சென்ற தன்னை, அந்த இசையமைப்பாளர் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாக ஸ்வாகதா குற்றம் சாட்டியுள்ளார். ஆரம்பத்தில் குடும்ப நண்பர்களைப் போல பழகி நம்பிக்கை ஊட்டிய அவர், பின்னர் சம்பளம் தராமல் ஏமாற்றியதுடன், கார் மற்றும் ஐபோன் வாங்க ஸ்வாகதாவிடமே கடன் வாங்கியுள்ளாராம். ஒரு கட்டத்தில், சவுண்ட் புரூப் (Sound-proof) அறையில் வைத்து ரகசிய கேமராக்கள் மூலம் தன்னை மிரட்டி, வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்புணர்வு செய்ததாக அவர் தெரிவித்துள்ள விபரம் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் மிகவும் திடுக்கிடும் தகவல் என்னவென்றால், அந்த இசையமைப்பாளர் தன்னைப் போல பல பெண்களையும், ஏன் ஸ்டுடியோவுக்குப் பாட வரும் சிறுமிகளைக் கூட ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துள்ளதாக ஸ்வாகதா கூறியுள்ளார். “அவர் எப்ஸ்டீனுக்கெல்லாம் ராஜா” என்று மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ள அவர், தன்னை மிரட்ட முயன்ற அந்த இசையமைப்பாளர், பின்னர் தன் மீது திருட்டுப் பட்டம் கட்டி பழிவாங்கியதாகவும், தனது மனைவியிடம் தற்கொலை நாடகம் ஆடித் தப்பித்ததாகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஜி.வி. பிரகாஷ், ஜிப்ரான், இமான், அனிருத் போன்றவர்கள் உண்மையான தொழில்முறை கலைஞர்கள் என்று பாராட்டிய ஸ்வாகதா, அந்த மோசமான இசையமைப்பாளரின் பெயரை தற்போது சட்ட ரீதியான காரணங்களால் வெளிப்படுத்தவில்லை என்று கூறியுள்ளார். இருப்பினும், நேரம் வரும்போது அவரைச் சட்டத்தின் முன் நிறுத்துவேன் என அவர் உறுதியளித்துள்ளார். தனது தங்கை மாயா கிருஷ்ணன் தான் அந்த இக்கட்டான சூழலில் இருந்து தன்னை மீட்டதாகக் கூறியுள்ள ஸ்வாகதாவின் இந்தப் புகார், திரையுலகில் மறைந்திருக்கும் இருண்ட பக்கங்களை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
