பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்து கொண்டு மின்னணு சிகரெட் (E-cigarette) பயன்படுத்தியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த 16-ஆவது ஓவரின் போது, கேமராக்கள் டிரெஸ்ஸிங் ரூமை நோக்கித் திரும்பின. அப்போது சக வீரர்களான துருவ் ஜுரெல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்த பராக், ‘வேப்’ கருவியைப் பயன்படுத்துவது போன்ற காட்சிகள் நேரலையில் பதிவாகின. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி நிர்ணயித்த 223 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இருப்பினும், மைதானத்தில் கிடைத்த வெற்றியை விட ரியான் பராக்கின் இந்தச் செயல் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய கேப்டன் பொறுப்பில் உள்ள ஒரு வீரர், பொதுவெளியில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது விளையாட்டு விதிகளுக்கு எதிரானது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய சட்டப்படி, ‘மின்னணு சிகரெட் தடைச் சட்டம் 2019’ (PECA) கீழ் இ-சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பிசிசிஐ (BCCI) விதிகளின்படி டிரெஸ்ஸிங் ரூமில் புகைபிடிப்பதோ அல்லது போதை தரும் பொருட்களைப் பயன்படுத்துவதோ கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். ஏற்கனவே இதே சீசனில் ராஜஸ்தான் அணியின் மேலாளர் ரோமி பிந்தர் டக்-அவுட்டில் மொபைல் போன் பயன்படுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், கேப்டன் மீதான இந்த புகார் அணியின் ஒழுக்கத்தைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. இருப்பினும், வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் பிசிசிஐ விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் “விளையாட்டு மைதானம் என்பது புனிதமான இடம், அங்கு வீரர்களின் இத்தகைய பொறுப்பற்ற செயல் கண்டிக்கத்தக்கது” என பதிவிட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் பிசிசிஐ எடுக்கும் முடிவு, மற்ற வீரர்களுக்கும் ஒரு பாடமாக அமையும் என்று கருதப்படுகிறது.
