ஹரியானா நாட்டுப்புற பாடகரும் யூடியூபருமான அங்கித் பாலியன், உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி பகுதியில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்திற்கு வெளியே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து வெளியேறி தனது காரை நோக்கிச் சென்ற அவரை பின்தொடர்ந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக சுட்டது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர் அருகில் உள்ள சமூக நல மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தாக்குதலுக்காக அதிநவீன .30 மற்றும் .32 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதும், மொத்தம் 12 ரவுண்டுகள் சுடப்பட்டதும் தெரியவந்துள்ளது. அங்கித் பாலியனின் பாடல்கள் பெரும்பாலும் வன்முறை மற்றும் துப்பாக்கி கலாச்சாரத்தை மையமாகக் கொண்டிருந்த நிலையில், அவர் தனது மரணத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்ட இறுதிப் பதிவில் வன்முறை வரிகளைக் கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/HateDetectors/status/2093279391929499712/video/1
இந்தப் படுகொலைக்கு பிரபல கோகி கும்பல் பொறுப்பேற்றுள்ளதோடு, தங்களின் எதிரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததே காரணம் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. இதற்கிடையில், கொல்லப்பட்ட பாடகரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்டன், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
