அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) தலைவராகவும், மாணவரணிச் செயலாளராகவும் செயல்பட்டு வந்த சிங்கை ராமச்சந்திரன் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகினார். அகமதாபாத் ஐ.ஐ.எம் (IIM) பட்டதாரியான இவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஈர்ப்பால் அரசியலுக்கு வந்தவர். இவரது தந்தை சிங்கை கோவிந்தராசும் அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சிங்கை ராமச்சந்திரன், தீவிர களப்பணியாற்றி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். தமிழக முதலமைச்சர் விஜய் அவருக்கு, தற்போது முக்கியப் பொறுப்பு வழங்கி கௌரவித்துள்ளார். மாநிலத்தின் தொழில்முனைவோர் சூழலை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் (TANSIM) புதிய தலைவராக (Chairperson) சிங்கை ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறை இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. TANSIM அமைப்பின் முதன்மைச் செயல் அதிகாரியாக (CEO) பணியாற்றி வந்த சிவராஜா ராமநாதன் கடந்த ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்போது இந்த அமைப்பிற்குப் புதிய தலைமை நியமிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைத் துறையில் சிங்கை ராமச்சந்திரனுக்கு இருக்கும் ஆழமான அனுபவம் இந்த இயக்கத்திற்குப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இளைய தலைமுறை தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும், புதிய தொழில் தொடங்கும் திட்டங்களுக்கு அரசு ஆதரவு அளிக்கவும் TANSIM இயக்கம் முக்கியப் பங்காற்றி வருகிறது. உயர்கல்வித் தகுதியும் தொழில்நுட்ப அறிவும் கொண்ட சிங்கை ராமச்சந்திரனின் இந்த நியமனம், தமிழகத்தின் ஸ்டார்ட்-அப் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் எனத் தொழில் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
