தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருந்தவர்தான் நடிகை சிம்ரன். அவர் சினிமாவில் முன்னணியில் இருந்த போது அந்த சமயத்தில் நடிக்க வந்த நடிகைகள் அனைவருமே எப்படியாவது சிம்ரன் மாதிரி வளர்ந்து விட வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டனர். 1995 ஆம் ஆண்டு வெளியான சனம் ஹர்ஜா என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் சிம்ரன். இந்தத் திரைப்படம் தான் நியூசிலாந்தில் முதல்முறையாக சூட் செய்யப்பட்ட இந்திய திரைப்படம். இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்ற சூழலில் சூப்பர் ஹிட் முக்காப்புலா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா கண்களில் சிம்ரன் பட அப்போது அவருடைய வாழ்க்கை மாறியது. அதாவது 1996 ஆம் ஆண்டு அமிதாப்பச்சனின் கம்பெனி தயாரித்த ஒரு படத்தில் சிம்ரன் ஹீரோயினியாக அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழில் விஐபி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தில் இடம் பெற்ற மின்னல் ஒரு கோடி பாடல் சிம்ரனின் நடனத்தையும் அழகையும் பார்த்து ரசிகர்கள் மயங்கினர். தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக ஒன்ஸ்மோர் படத்தில் நடித்தார். இவர் நடித்த முதல் இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் முதல் இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு சிம்ரனுக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தது. அவரும் சரியான கதையை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வந்தார். ஒரு பக்கம் கிளாமர் ரோலில் கலக்கியவர் மறுபக்கம் ஹோம்லி கேரக்டர் கொடுத்தாலும் அதிலும் தன்னுடைய தடத்தை பதித்தார்.

இதனால் தமிழ் சினிமாவுக்கு ஒரு நடிக்க தெரிந்த நடிகை கிடைத்துவிட்டார் என்று ஒட்டுமொத்த திரையுலகமும் பேசியது. விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த சிம்ரன் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் தன்னுடைய தாக்கத்தை ஏற்படுத்தினார். இப்படி கொடிகட்டி பறந்த சிம்ரன் திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். பிறகு வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் இறுதியாக டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் சசிகுமார் உடன் இணைந்து நடித்திருந்தார்.
இந்த படத்தில் சிம்ரனின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டப்பட்டது. இப்படியான நிலையில் சிம்ரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், என் உண்மையான பெயர் ரிஷி பாலா. இப்பவும் என்னுடைய பாஸ்போர்ட்டில் அதே பெயர்தான் உள்ளது. ஆனால் ரிஷி என்ற பெயர் ஆண் பெயர் போல இருப்பதாக சொல்லி இயக்குனர் சவென் குமார் என் பெயரை மாற்றினார். சொல்லப்போனால் என் பெயரை எனக்கு முதலில் உச்சரிக்கவே தெரியவில்லை. சிம்ரன் என்பது பஞ்சாபி பெயர். நானும் பஞ்சாபி தான். ஆனால் எனக்கு பஞ்சாபி வராது. பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பை தான் என்று சிம்ரன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
