வீட்டிற்கு அழையா விருந்தாளிகளாக வரும் எலி, கரப்பான், சிலந்தி, கொசு போன்ற பூச்சிகளால் ஏற்படும் தொல்லையை, ஸ்ப்ரேக்கள் மற்றும் மருந்துகளால் நிரந்தரமாக நீக்க முடிவதில்லை. இனிமேல், இதற்காகக் கவலைப்படாமல், வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை பயன்படுத்தியே அனைத்து வகையான பூச்சிகளையும் நிரந்தரமாக விரட்டலாம்.
குறிப்பாக, எறும்பு, கரப்பான்பூச்சி, எலி, பல்லி போன்ற பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருந்தால், குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படும். இரசாயன மருந்துகளைத் தவிர்த்து, வீட்டிலேயே ஒரு பயனுள்ள தீர்வைத் தயாரிக்கும் முறையைக் காணலாம்.
பூச்சிகளை விரட்டும் மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்:
பீனைல் மாத்திரை – 2, பச்சை மிளகாய் – 2 (அல்லது மிளகாய்ப் பொடி), கற்பூரம் – 2 கட்டி, போரிக் பவுடர் (அல்லது சுண்ணாம்புப் பவுடர்) – 3 ஸ்பூன், கோதுமை மாவு – 4 ஸ்பூன், மற்றும் ஃப்ளோர் க்ளீனர் – 2 மூடி.
தயாரிக்கும் முறை:
பீனைல் மாத்திரை மற்றும் கற்பூரத்தை நன்கு பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியுடன் மிளகாய் (அ) மிளகாய்ப் பொடி மற்றும் போரிக் பவுடர் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். பின்னர், கோதுமை மாவில் சிறிது ஃப்ளோர் க்ளீனர் சேர்த்து, இந்தக் கலவையுடன் பிசைந்து, சப்பாத்தி மாவு பதத்திற்குக் கொண்டு வர வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, அதைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
சின்ன நெல்லிக்காய் அளவில் உருட்டிய இந்த உருண்டைகளை, பூச்சிகள் அதிகமாக நடமாடும் இடங்களான கிச்சன் ஷெல்ஃப்கள், புத்தக அலமாரிகள், ஃபிரிட்ஜின் பின்புறம், குப்பைத் தொட்டிக்கு அருகில் மற்றும் பீரோக்களுக்கு அடியில் தேவையான அளவு வைக்க வேண்டும். இந்த உருண்டைகளில் உள்ள பீனைல் மற்றும் கற்பூரத்தின் கடுமையான வாசனையால் பூச்சிகள் மயங்கி அல்லது வீட்டை விட்டு ஓடும். இதில் சேர்க்கப்படும் போரிக் அமிலம், இயற்கையான பூச்சிக்கொல்லியாகச் செயல்பட்டு, இந்தப் பூச்சிகளை வீட்டை விட்டு விரட்ட உதவும்.
