“மாணவர்களுக்காக உயிராகுடுப்பேன்…” நீதி கிடைக்கிற வரைக்கும் விடமாட்டான்… தொடரும் உண்ணாவிரதம்… மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ…!

By Visaka on ஆடி 23, 2026

Spread the love

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக 25 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, தான் உயிருடன் இருப்பதாகக் கூறி அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்; 25 நாட்கள் உண்ணாவிரதத்தில் 11 கிலோ எடை குறைந்து தசைநார்கள் பலவீனமடைந்திருந்தாலும் நலமாகவே உள்ளேன். மாணவர்கள் மீது தடிஅடி நடத்தப்பட்டபோதும், தூண்டுதல்களுக்கு ஆளாகாமல் அமைதியான முறையில் போராடியது என்னை நெகிழ வைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ள அவர், மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் பலர் தன்னிடம் வந்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்து வருவதாகக் குறிப்பிட்ட வாங்சுக், அரசாங்கம் தனது கோரிக்கையை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்துள்ளார். “மாணவர்கள் மீது இனிமேல் எந்தவித பலப்பிரயோகமும் செய்யக்கூடாது; அவர்கள் மீது பொய் வழக்குகளோ, எஃப்.ஐ.ஆர்-களோ பதிவு செய்து சிறை அல்லது காவல்துறை மூலம் துன்புறுத்த மாட்டோம் என்ற உறுதிமொழியை அரசு உடனடியாக வழங்க வேண்டும். இந்த உறுதிமொழி கிடைத்தால் இன்றே எனது போராட்டத்தை முடித்துக் கொள்கிறேன், இல்லையெனில் உண்ணாவிரதம் தொடரும்” என உறுதியாகத் தெரிவித்துள்ளார். இதனிடையே, சென்னை எழும்பூரில் திரைப்பட இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்று வரும் சூழலில், நாடு முழுவதிலும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டக் குரல்கள் வலுத்து வருகின்றன.