தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட விஜய்க்கு, முதல் நாளிலேயே பெரும் அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. வழக்கமாகத் தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, தேசிய கீதத்துடன் நிறைவடைவதுதான் மரபு. ஆனால், முதல்வர் பதவியேற்பு மற்றும் தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு ஆகிய இரு முக்கிய நிகழ்வுகளிலும், அந்த மரபை மீறி ‘வந்தே மாதரம்’ பாடல் முதலில் இசைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடைமுறை மாற்றத்திற்குத் தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் தவெக கூட்டணியில் உள்ள சிபிஐஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. தமிழ்நாட்டின் கலாச்சார அடையாளமான தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்துவிட்டு, வந்தே மாதரம் பாடலுக்கு முன்னுரிமை அளித்தது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. பதவியேற்ற முதல் நாளிலேயே முதல்வர் விஜய் இத்தகைய ஒரு சர்ச்சையில் சிக்கியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
