டெல்லியிலிருந்து சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் நோக்கிச் சென்ற அலையன்ஸ் ஏர் விமானம், பிலாஸ்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகும் அபத்திலிருந்து தப்பியது. தரையிறங்கும் வேளையில் விமானத்தின் இடது பக்க டயர் திடீரென வெடித்ததால் ஓடுபாதையில் சிறிய பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விமானத்தில் 37 பயணிகள் மற்றும் 4 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 41 பேர் பயணம் செய்தனர். டயர் வெடித்ததை அடுத்து, விமானியின் திறமையான கட்டுப்பாட்டால் விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, விமானத்தில் இருந்த அனைவரும் எந்தவித காயமுமின்றி உயிர் தப்பினர்.
இதனைத் தொடர்ந்து, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, ஓடுபாதையிலிருந்து விமான நிலையத்தின் முனைய கட்டிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்து காரணமாக பிலாஸ்பூரில் இருந்து இயக்கப்படவிருந்த அடுத்த கட்டப் பயண ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், விமானத்தை ஆய்வு செய்ய தொழில்நுட்பக் குழு வரவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
