உஷார்… ரயில்களில் இனி இந்தத் தப்பை… செஞ்சா பர்ஸ் காலி… புதிய அபராத விதிகளை வெளியிட்ட ரயில்வே நிர்வாகம்… முழு விவரம் உள்ளே…!

By Swetha on ஆவணி 29, 2026

Spread the love

இந்திய ரயில்வே நிலையங்கள் மற்றும் ரயில்களில் தூய்மையைப் பேணுகின்ற நோக்கத்தோடு, குப்பை போடுபவர்களுக்கான அபராதத் தொகையை ரூ.500-லிருந்து ரூ.1,000 ஆக உயர்த்தி ரயில்வே அமைச்சகம் புதிய திருத்த விதிகளை அமல்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 24 அன்று வெளியிடப்பட்ட இந்த அரசிதழ் அறிவிப்பின்படி, பயணிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து ரயில்களிலோ அல்லது நிலைய வளாகத்திலோ குப்பைகளைக் கொட்டவோ அல்லது விட்டுச் செல்லவோ கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், சம்பந்தப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் புதிய விதிகளில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் மற்றும் ரயில் நிலையப் பகுதிகளில் குப்பை போடுவது மட்டுமின்றி, முறையான வசதிகள் செய்யப்படாத பட்சத்தில் அங்கு சமைத்தல், குளித்தல், துப்புதல், சிறுநீர் மற்றும் மலம் கழித்தல், விலங்குகளுக்கு உணவளித்தல் போன்ற செயல்களுக்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்கள், பாத்திரங்கள் அல்லது துணிகளைக் கழுவுதல், அனுமதியின்றிப் பொருட்களைச் சேமித்து வைத்தல் மற்றும் ரயில் பெட்டிகளிலோ சொத்துக்களிலோ சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற செயல்களும் இந்தத் தூய்மை விதிகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன.

   

இந்தக் புதிய விதிமுறைகள் சாதாரண பயணிகளுக்கு மட்டுமல்லாமல், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கும் முழுமையாகப் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. வியாபாரிகள் தங்களது கடைகளில் குப்பைகளைச் சேகரிக்கத் தனித்தனிக் குப்பைத் தொட்டிகளைப் பராமரிக்க வேண்டும் என்பதோடு, சேகரிக்கப்பட்ட அந்தக் கழிவுகள் அனைத்தையும் முறையாக அப்புறப்படுத்துவதையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.