வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணபதி சக்கரவர்த்தி, அவரது மனைவி பிரீதிலதா, மகள் ஆகாமி மற்றும் 12 வயது மகன் பிரியம் ஆகியோர் அவர்களின் வீட்டில் வெவ்வேறு பகுதிகளில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த பயங்கரமான கொலை சம்பவம் தொடர்பாக சித்தார்த்த தாஸ் மற்றும் முக்தா தாஸ் ஆகிய இரு இளைஞர்களை வங்கதேச காவல்துறை கைது செய்துள்ளது.
இந்தக் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று இரவு, கைது செய்யப்பட்ட அந்த இரு இளைஞர்களும் கணபதியின் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று ‘யாபா’ எனப்படும் ஆபத்தான போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளனர். அப்போது சத்தம் கேட்டு மொட்டை மாடிக்குச் சென்ற கணபதி, அவர்களைக் கண்டித்து விசாரித்துள்ளார். தாங்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்தில், அவர் தோளில் வைத்திருந்த துண்டாலேயே அவரது கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து சத்தம் கேட்டு வந்த அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளையும் குற்றவாளிகள் அடுத்தடுத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரைக் கொலை செய்த பிறகும், அந்த இளைஞர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பிச் செல்லவில்லை என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சுமார் 6 முதல் 7 மணி நேரம் அதே வீட்டிலேயே பதுங்கியிருந்த அவர்கள், மீண்டும் போதைப்பொருள் உட்கொண்டுள்ளனர். மேலும், ஃப்ரிட்ஜில் இருந்த வெள்ளரிக்காய் மற்றும் பேரீச்சம்பழம் ஆகியவற்றைச் சாப்பிட்டுவிட்டு, அங்கேயே குளித்துமுடித்துவிட்டு சாவகாசமாகத் தப்பியுள்ளனர். தடையங்களை அழிப்பதற்காக இறந்தவர்களின் செல்போன்களை சோப்புத் தண்ணீரில் கழுவியதோடு, இதனை ஒரு கொள்ளைச் சம்பவம் போல் திசை திருப்புவதற்காக வீட்டின் பொருட்களைச் சிதறடித்ததும் காவல் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
