கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வெள்ளிமாடுகுந்நு பகுதியில் உள்ள அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில், 12 வயது சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இச்சீர்திருத்தப் பள்ளியில் தங்கியிருந்த சிறார்களுக்கு இம்மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட கவுன்சிலிங்கின் போது, பாதிக்கப்பட்ட சிறுவன் கண்ணீருடன் தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூறியுள்ளார். அப்பள்ளியின் காப்பாளரான செலவூர் பகுதியைச் சேர்ந்த பி.அயூப் என்பவர், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தன்னை காப்பகத்திலேயே வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அச்சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
சிறுவனின் புகாரைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட காப்பாளர் பி.அயூப் மீது போக்ஸோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் சேவாயூர் போலீஸார் ஜூன் 5-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்ததை அறிந்தவுடன் அயூப் தலைமறைவானார். அவரைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், தப்பிக்க வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்ட அயூப், இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் சிறார்களை நல்வழிப்படுத்த வேண்டிய அரசு சீர்திருத்தப் பள்ளியிலேயே இத்தகைய கொடூரம் நடந்துள்ளது கேரள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனைத் தவிர, அங்கு தங்கியிருக்கும் மற்ற சிறுவர்களிடமும் அயூப் இது போன்ற பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் சேவாயூர் போலீஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
