திரையுலகில் அஜித் மற்றும் விஜய் இடையே எவ்வித தனிப்பட்ட போட்டியும் கிடையாது என்றும், அவர்களது நட்பு இன்றும் உறுதியாக இருப்பதாகவும் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இவ்விரு குடும்பங்களும் அவ்வப்போது சந்தித்துக் கொள்வதாகவும், அஜித்தின் மனைவி ஷாலினியுடன் தங்களுக்கு இப்போதும் நல்ல தொடர்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அஜித்தின் ஸ்டைல் மற்றும் குரல் தனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறிய அவர், அஜித் தனது திருமணத்திற்கு நேரில் வந்து அழைப்பிதழ் வழங்கி ஆசி பெற்ற நிகழ்வையும் நினைவுகூர்ந்தார்.
குறிப்பாக ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்பட படப்பிடிப்பின் போது, விஜய்க்கு உணவு அனுப்பும்போது அஜித்திற்கும் சேர்த்தே தான் சமைத்து அனுப்புவேன் என்ற நெகிழ்ச்சியான தகவலை அவர் பகிர்ந்துள்ளார். இதனை ஒரு மேடையில் அஜித்தே நன்றியுடன் குறிப்பிட்டதை ஷோபா சந்திரசேகர் பெருமையுடன் நினைவு கூர்ந்தார். இருவரும் இணைந்து நடிக்காவிட்டாலும், அவர்களுக்குள் இருக்கும் புரிதலும் அன்பும் மாறவில்லை என்று அவர் கூறியுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை பரபரப்பாகப் பேசப்படும் சூழலில், இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
