வங்கதேசத்தில் ஏற்பட்ட கடுமையான உள்நாட்டு வன்முறையைத் தொடர்ந்து, கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார் ஷேக் ஹசீனா. கடந்த 21 மாதங்களாக இந்தியாவில் ரகசிய இடத்தில் தங்கி, மத்திய அரசின் பலத்த பாதுகாப்பில் இருந்து வரும் அவர் மீது வங்கதேச சர்வதேச குற்ற தீர்ப்பாயத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த 2025 நவம்பரில் வெளியான தீர்ப்பில், ஷேக் ஹசீனா மற்றும் அவரது அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து அவரை நாடு கடத்த வேண்டும் என்று வங்கதேச அரசு விடுத்த கோரிக்கைகளை, அவரது உயிருக்கு ஆபத்து நேரிடும் என்ற காரணத்தால் இந்திய மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது.
இலங்கை மற்றும் பிற அண்டை நாடுகளின் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான ஒன்றரை ஆண்டுகால இடைக்கால ஆட்சி நிறைவு பெற்று, சமீபத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் பிஎன்பி (BNP) கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் வெற்றி பெற்று புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். இடைக்கால அரசு மற்றும் தற்போதைய தாரிக் ரஹ்மான் அரசு என இரு தரப்புமே ஷேக் ஹசீனாவை இந்தியா தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையிலும், இந்திய அரசு அதில் மௌனம் காத்து வந்தது.
இந்தச் சூழலில், ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி வாயிலாகப் பேட்டியளித்துள்ள ஷேக் ஹசீனா, இந்தியாவை விட்டு வெளியேறி வங்கதேசம் திரும்பப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நானும் எனது அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர்களும் வரும் டிசம்பர் மாதம் வங்கதேசம் செல்ல முடிவு செய்துள்ளோம்; அங்கு சென்று நீதிமன்றத்தின் முன் சரணடைவோம். அவர்கள் எங்களைக் கைது செய்தாலோ அல்லது கொலை செய்தாலோ அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தனது சொந்த மண்ணிற்குத் திரும்புவதற்கான காரணத்தை விளக்கிய அவர், வங்கதேசத்தில் தனது கட்சித் தொண்டர்களும் தலைவர்களும் கடுமையான அடக்குமுறைகளைச் சந்தித்து வருவதைச் சுட்டிக்காட்டினார். மேலும், “எனக்கு மரணம் நேரிடுமானால் அது நான் பிறந்து வளர்ந்த, எனது பெற்றோர் நாட்டுக்காக ரத்தம் சிந்தி அடக்கம் செய்யப்பட்டுள்ள எனது சொந்த மண்ணில் தான் நிகழ வேண்டும் என்று விரும்புகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசு அவரைப் பாதுகாக்க முயன்றாலும், அரசியல் ரீதியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் அவர் எடுத்துள்ள இந்த முடிவு தெற்காசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
