உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜிஜேந்திரா என்பவர், அரியானா மாநிலம் ரோக்டக் பகுதியில் தங்கி கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தீபக் என்ற 4 வயது மகன் இருந்தான். சம்பவத்தன்று சிறுவன் தீபக் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானான். பதறிய பெற்றோர் அவதிப்பட்டு குழந்தையை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஜிஜேந்திரா உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்த நிலையில், அங்குள்ள ஒரு குப்பைக் கிடங்கில் சிறுவன் தீபக் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டான். அவனது உடலில் காயங்கள் இருந்ததால், யாரோ மர்ம நபர்கள் சிறுவனை கடத்திக் கொலை செய்து வீசிவிட்டுச் சென்றது தெரியவந்தது.
சிறுவனின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
