CINEMA
SAC யிடம் அடிவாங்கிகிட்டு என்கிட்ட வந்து புலம்புவார் ஷங்கர்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!
தமிழ் சினிமாவின் வியாபார எல்லையைப் பெருக்கியவர்களில் ஒருவர் இயக்குனர் ஷங்கர். அவர் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 கமர்ஷியல் இயக்குனராக அறியப்பட்டார். ஆனால் சமீபகாலமாக அவர் இயக்கிய ஐ, 2.0 மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்கள் அவரது முந்தையப் படங்களின் வெற்றியைப் பெறவில்லை.
அதிலும் இந்தியன் 2 திரைப்படம் கடுமையான கேலிகளுக்கு ஆளாகியுள்ளது. சமூகவலைதளங்களில் அந்த படத்தை அக்குவேறு, ஆணிவேராகக் கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தனைக்கும் ஷங்கர் தன்னுடைய படங்களில் ஊழல் எனும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதே காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இயக்குனர் ஷங்கரின் வெற்றிக்கு சுஜாதா ஒரு முக்கியக் காரணியாக இருந்தார். அவர் படத்துக்கு சுஜாதா இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன் மற்றும் சிவாஜி என தொடர்ந்து பணியாற்றினார். டைட்டிலில் சுஜாதா வசனம் என்று மட்டும் வந்தாலும், அவர் எல்லா படங்களிலும் திரைக்கதையிலும் பணியாற்றியுள்ளார் என்பது அவரை அறிந்தவர்களுக்கு தெரியும். இந்த படங்களில் வசனங்கள் கனக்கச்சிதமாக இருக்கும். இருவரும் இணைந்து கடைசியாக பணியாற்றிய படம் என்றால் அது ரஜினி நடித்த எந்திரன் படம்தான். அதன் பின்னர் ஷங்கர் தடுமாறி வருகிறார் என்பது கண்கூடு.
இந்நிலையில் ஷங்கரின் ஜெண்டில்மேன் திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த சரண் ராஜ் இந்தியன் 2 படத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் “இந்தியன் 2 ஒரு படமா? படம் எடுக்கும்போது ஷங்கர் தூங்கிவிட்டாரா? அவர் படத்தில் வழக்கமாக பாடல்களாவது நல்லா இருக்கும். இந்த படத்தில் அதுவும் இல்லை. கமல் சார் படம் போலவே இல்லை.
ஷங்கர் என்னுடைய நண்பர் என்பதால்தான் இதை சொல்கிறேன். அவர் நான் எஸ் ஏ சி படங்களில் நடிக்கும் போது அதில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அப்போது ஷங்கர் எதாவது தவறு செய்தால் எஸ் ஏ சி அடித்துவிடுவார். அப்போது என்னிடம் அழுதுகொண்டே வந்து புலம்புவார் ஷங்கர். நான்தான் அவருக்கு ஆறுதல் சொல்வேன்.” எனப் பேசியுள்ளார்.
ஷங்கர் இயக்குனர் ஆவதற்கு முன்பு எஸ் ஏ சந்திரசேகரனிடம் 17 படங்கள் உதவி இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.