முதல் படத்திலேயே இரண்டு முன்னணி நடிகைகளோடு டூயட்.. இப்படி ஒரு அறிமுகம் யாருக்குக் கிடைக்கும்?… இருந்தும் சறுக்கியது எங்கே!

By vinoth on சித்திரை 16, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் குஷி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் ஷாம்.  அந்த படத்தில் விஜய்யின் நண்பர்களில் ஒருவராக ஒரு சிலக் காட்சிகளிலேயே அவர் தொன்றுவார். அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஜீவா, இவரின் நண்பர் என்பதால் அவர் இயக்குனராக அறிமுகமான 12 B படத்தில் ஷாமைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்.

அந்த படத்தில் ஷாமைத் தவிர மற்ற அனைவருமே அப்போது முன்னணியில் இருந்தவர். முதல் படத்திலேயே ஷாமுக்கு இரண்டு கதாநாயகிகள். அதுவும் அப்போது உச்சத்தில் இருந்த சிம்ரன் மற்றும் ஜோதிகா. ஹாரிஸ் ஜெயராஜ் முத்து முத்தான பாடல்களைப் போட்டுக் கொடுத்தார். இதன் காரணமாக அந்த படம் நல்ல வெற்றியைப் பெற்று ஷாமை கவனிக்கவைக்கும் நடிகராக்கியது.

   

   

ஆனாலும் ஷாமால் ஒரு கட்டத்துக்கு மேல் சினிமா மார்க்கெட்டில் நிலைக்க முடியவில்லை. இத்தனைக்கும் ஷாம் ஒரு திறமையான நடிகர்தான் என்றாலும் அவர் தேர்ந்தெடுத்தக் கதைகள்தான் அவரது தோல்விக்குக் காரணம் என்று சொல்லலாம். அதே போல தமிழ் சினிமா ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒரு மாற்றத்தை சந்திக்கும். அந்த மாற்றத்தோடு சேர்ந்து நாமும் ஓடாவிட்டால் நம்மைத் தள்ளிவிட்டுவிட்டு சினிமா ஓடிவிடும். அப்படி மாற்றத்தைப் புரிந்துகொண்டு அதோடு ஓடாமல் ஷாம் எங்கோ தேங்கிவிட்டார்.

 

அதனால் அவருக்கு என்று இப்போது சினிமாவில் எந்த ஒரு அடையாளும் இல்லாத சூழல் உருவாகிவிட்டது. அதன் பிறகு இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற பல திரைப்படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபகாலத்தில் அவர் நடிப்பில் வந்த குறிப்பிடத்தகுந்த படம் என்றால் அது வி இசட் துரை இயக்கத்தில் அவர் நடித்த ‘ஆறு மெழுகுவர்த்திகள்’ திரைப்படம்தான். அந்தப் படம் கூட வணிக வெற்றியைப் பெறவில்லை என்பதுதான் சோகம்.