உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள சீப்ரி பஜார் பகுதியில், கணவனே தனது நண்பனுக்கு உடந்தையாக இருந்து மனைவியைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரின்படி, கடந்த 2023-ம் ஆண்டு தனது முதல் கணவர் இறந்த பிறகு, தற்போதுள்ள கணவரைச் சந்தித்து 2024 நவம்பரில் மறுமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு கணவரின் நண்பரான ஒரு அரசு அதிகாரி (லேக்பால்) அடிக்கடி இவர்களது வீட்டுக்கு வந்து சென்றது அந்தப் பெண்ணிற்குச் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை.
சம்பவத்தன்று இரவு, கணவனும் அவரது நண்பரும் மது அருந்திவிட்டு போதையில் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது அந்தப் பெண்ணிற்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததாகத் தெரிகிறது. மயக்கமடைந்த பெண்ணை அந்த அரசு அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மறுநாள் காலை கண்விழித்த பெண், தான் சீரழிக்கப்பட்டதை உணர்ந்து அலறித் துடித்தபோது, அவரது கணவரே அவருக்கு ஆறுதல் கூறாமல், நடந்ததை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவனால் வீட்டை விட்டு விரட்டப்பட்ட அந்தப் பெண், காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்துள்ளார். மனைவியைப் பாதுகாக்க வேண்டிய கணவனே, தனது நண்பனுக்குப் பெண்ணைப் பங்கிட்டுக் கொடுத்த இந்தக் கொடூரச் செயல் சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியச் சட்டப்படி பாலியல் வன்கொடுமை மற்றும் அதற்கு உடந்தையாக இருப்பது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட கணவர் மற்றும் அவரது நண்பர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
