விழுப்புரத்தில் பெண்கள் பாதுகாப்பிற்காகச் சிறப்பாக உருவாக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை பெண் உதவி ஆய்வாளரிடமே, மதுபோதையில் இருந்த வாலிபர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த திலீப் என்ற அந்த வாலிபர், பணியில் இருந்த பெண் போலீசாரிடம் ஆபாசமாகப் பேசி, விசில் அடித்து சைகை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து போலீசாரையே வம்புக்கு இழுத்த அந்த வாலிபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் களமிறக்கப்பட்ட பிரத்யேக பெண் போலீஸ் படையினரிடமே வாலிபர் ஒருவர் இவ்வாறு துணிகரமாக அத்துமீறிய சம்பவம், தற்பொழுது அப்பகுதியில் விவாதப் பொருளாக மாறியுள்ளதோடு, காவல்துறை தரப்பிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
