“அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க…” நள்ளிரவில் வார்டன் கொடுத்த பாலியல் தொல்லை.. திண்டுக்கல் கல்லூரியில் மாணவிகள் கதறல்..!!

By Muthu Mani on ஆனி 6, 2026

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தனியார் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகளுக்குப் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், தொடர்ந்து தரமற்ற உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்துப் பலமுறை கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகாரளித்தும் எவ்வித நடடிவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், பெண்கள் விடுதியில் உள்ள மாணவிகள் உணவருந்துவதற்காக ஆண்கள் விடுதிக்குச் செல்வது வழக்கம் என்பதால், உணவு தயாராகிவிட்டதா என்பதைத் தெரிவிப்பதற்காக அங்கிருந்த மாணவிகளின் தொலைபேசி எண்களை ஆண் விடுதி வார்டன் வாங்கி வைத்துள்ளார். ஆனால், அந்த வார்டன் நள்ளிரவு மற்றும் தேவையற்ற நேரங்களில் மாணவிகளைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பாலியல் ரீதியாகப் பேசித் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது குறித்துக் கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டபோது, “இதை அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. ஒருத்தர் பிரச்சினையை எல்லாரோட பிரச்சினையா மாத்தாதீங்க” என்று கூறிப் புகாரை அலட்சியப்படுத்தியதாக மாணவிகள் தரப்பில் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

   

இதைத் தொடர்ந்து, இக்கல்லூரியில் தமிழக அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் முதலாம் ஆண்டு படித்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தீபா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, ஆட்சியர் துர்காவிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். ஆறு மாதங்களாகியும் வார்டன் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், தங்களை உடனடியாக வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, இக்கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கல்லூரி தாளாளர் செல்வகுமார் உட்பட மூன்று பேர் மீது சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.