பணப்பெட்டியில் திருடி கடத்தல் கும்பலுக்கு லஞ்சம்.. ஹோட்டலில் சிறுமியை வன்கொடுமை செய்த இந்திய வாலிபருக்கு அமெரிக்காவில் 10 ஆண்டு சிறை – இந்தியாவுக்கு நாடுகடத்த உத்தரவு..!!

By Soundarya on வைகாசி 30, 2026

Spread the love

அமெரிக்காவின் நெப்ராஸ்கா (Nebraska) மாகாணத்தில் உள்ள விடுதி ஒன்றில், மனிதக் கடத்தல் கும்பலுக்குப் பணம் கொடுத்து மைனர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இந்தியாவைச் சேர்ந்த கவன்குமார் படேல் (27) என்ற இளைஞருக்கு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இவர், அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கி அங்குள்ள ‘அமெரிக்கின்’ (AmericInn) என்ற ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மே 26, 2026 அன்று இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதுடன், அவரது சிறைக்காலம் முடிந்த பிறகு அவர் உடனடியாக இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவார் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தக் கொடூரமான கடத்தல் கும்பலின் பின்னணி, கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அந்த ஹோட்டலில் நடந்த ஒரு சாதாரண திருட்டுப் புகாரை போலீஸார் விசாரிக்கச் சென்றபோது தற்செயலாக வெளிச்சத்திற்கு வந்தது. அங்கு நடத்தப்பட்ட தீவிர சோதனையில், 15 மற்றும் 16 வயதுடைய இரு சிறுமிகளை போலீஸார் மீட்டனர். அந்தச் சிறுமிகள் வேறு மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு, அங்கு அடைத்து வைக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

   

ஹோட்டலில் தங்குவதற்கான வாடகையைக் குறைப்பதற்காக, அங்கிருந்த ஊழியர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று கடத்தல்காரர்கள் அந்தச் சிறுமிகளை மிரட்டியுள்ளனர். அப்போது அங்கு வேலை செய்த கவன்குமார் படேல், ஹோட்டலின் பணப்பெட்டியிலிருந்து (Cash Till) பணத்தைத் திருடி, மனிதக் கடத்தல் கும்பலுக்குக் கொடுத்து ஒரு சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற ஹோட்டல் ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்குப் போதிய உணவு கூட வழங்காமல் கடத்தல் கும்பல் கொடுமைப்படுத்தியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.