ஐரோப்பிய நாடுகள் முழுவதும் கடுமையான வெப்ப அலை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், பல நாடுகளில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், கிரீஸ், குரோஷியா, அல்பேனியா உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலையைத் தொடர்ந்து, தற்போது ஜூலை தொடக்கத்திலேயே வெப்பம் மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது சூழலியல் ஆர்வலர்களைப் பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, தெற்கு ஐரோப்பாவில் மட்டும் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான வனப்பகுதிகள் தீக்கிரையாகியுள்ளன; இது நியூயார்க்கின் மான்ஹாட்டன் பகுதியை விட மூன்று மடங்கு பெரிய பரப்பளவாகும்.
குறிப்பாக, பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பெர்பின்யான் அருகே ஏற்பட்ட காட்டுத்தீயால் 4,600 ஹெக்டேர் நிலப்பரப்பு நாசமாகியுள்ளதுடன், 10,500-க்கும் மேற்பட்ட மக்கள் இரவோடு இரவாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். உலகப் புகழ்பெற்ற ‘டூர் டி பிரான்ஸ்’ சைக்கிள் போட்டியும் இந்த தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளது; பாதுகாப்பு காரணங்களால் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, வீரர்கள் மட்டுமே குறிப்பிட்ட வழித்தடத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், கிரீஸின் தெசலோனிகி நகரில் ஏற்பட்ட தீ விபத்தால் தொழிற்சாலைகள் சூழப்பட்ட நிலையில், ஸ்பெயினின் சுற்றுலா மையமான கோஸ்டா பிராவா பகுதியில் இரண்டே நாட்களில் 2,200 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது.
இதற்கிடையே, தெற்கு ஸ்பெயினின் ஆண்டலூசியா மற்றும் எக்ஸ்ட்ரமடூரா பகுதிகளில் வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளதால், மேலும் புதிய காட்டுத்தீகள் உருவாகும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையங்கள் எச்சரித்துள்ளன. போர்ச்சுகலின் வடக்கு பகுதிகளில் 13 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி அழிந்துள்ள நிலையில், அங்கு இன்னும் நான்கு பகுதிகளில் வெப்ப எச்சரிக்கை நீடிக்கிறது. குரோஷியாவின் ஹ்வார் தீவு மற்றும் அல்பேனியாவின் டேல் பகுதியிலும் காட்டுத்தீ பரவி வனப்பகுதிகளோடு சேர்த்து திராட்சைத் தோட்டங்களையும் கடுமையாகச் சேதப்படுத்தியுள்ளது.
இந்தத் தொடர் பேரிடர்களுக்குப் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் ‘காலநிலை மாற்றமே’ முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் மீண்டும் திட்டவட்டமாக வலியுறுத்துகின்றனர். கடந்த ஜூன் மாதத்தில் ஐரோப்பாவில் பதிவான வரலாறு காணாத வெப்ப அலையின் காரணமாக பிரான்சில் 2,000-க்கும் அதிகமான கூடுதல் உயிரிழப்புகளும், ஸ்பெயின் மற்றும் பெல்ஜியத்தில் தலா ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இந்த வார இறுதி வரை கடுமையான வெப்ப அலை நீடிக்கக்கூடும் என்பதால் போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்களது மக்களுக்குத் தீவிர வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளன.
