பெங்களூரு ஜேபி நகரைச் சேர்ந்தவர் ஆஷா. 59 வயதான ஆஷா தனியாக வசித்து வந்தார். இவர் உடல்நல குறைவால் படுத்த படுக்கையாக இருந்த தனது தாயை பார்த்துக் கொள்ள கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மங்களா என்ற பெண்ணை வேலைக்கு சேர்த்தார். மைசூர் மாவட்டத்தை சேர்ந்த மங்களா ஆஷாவின் தாயை நன்கு கவனித்துக் கொண்டார். அவரது தாய் இறந்த பின்னரும் ஆஷா மங்களாவை வேலைக்கு வைத்திருந்தார்.
கடந்த 10-ஆம் தேதி ஆஷா வீட்டில் இருந்து 51.5 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் திருடு போனது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மங்களாவை கைது செய்து அவரிடம் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை மீட்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அதாவது 51 லட்சம் மதிப்புள்ள நகைகளுக்காக 5 கோடி மதிப்புள்ள பங்களாவை மங்களா இழந்தார்.
தனது தாயை நன்கு கவனித்து வந்த மங்களாவுக்கு ஆஷா 5 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை தானமாக எழுதி கொடுத்திருந்தார். ஆனால் மங்களா தனது காதலனுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, சூதாட்டத்தில் ஈடுபடுவது என 40 லட்ச ரூபாய் வரை பணத்தை இழந்தார். அதன் பிறகு பண தேவைக்காக ஆஷாவின் வீட்டில் திருடியுள்ளார். இந்த மோசடியால் ஆஷா தான் எழுதிக் கொடுத்த 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவையும் தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார்.
