“செந்தில் பாலாஜி போட்ட மாஸ்டர் பிளான்”…. காங்கிரஸை அதிரவைத்த ஸ்ரீநிதியின் திமுக தாவல்…. வெளிவந்த அதிர்ச்சி பின்னணி….!

By Nanthini on ஆனி 19, 2026

Spread the love

சட்டமன்றத் தேர்தல் களம் ஓய்ந்துவிட்ட நிலையிலும், கோவை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் புதியதொரு புயல் வீசத் தொடங்கியுள்ளது. சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஸ்ரீநிதி, திடீரென நேற்று காங்கிரஸிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரு தரப்பு முக்கிய நிர்வாகிகளும், இந்த திடீர் அரசியல் மாற்றத்திற்குப் பின்னணியில் அமைச்சர் செந்தில் பாலாஜியே முழு மூச்சாக இருந்து காய்களை நகர்த்தியுள்ளார் என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போதே திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் இடையே தொகுதிகள் ஒதுக்கீட்டில் கடுமையான முரண்பாடுகளும் மனக்கசப்புகளும் நிலவின. கூட்டணி முறியும் நிலைக்குச் சென்றதால், காங்கிரஸ் அதிக இடங்களில் வெல்வதைத் தவிர்க்கவும், அப்படியே வென்றாலும் அவர்கள் தங்களுக்கு இணக்கமானவர்களாக இருக்க வேண்டும் என்றும் திமுக திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வியூகத்தின் அடிப்படையிலேயே, முன்னதாக கமல் கட்சியின் (மநீம) நிர்வாகியாக இருந்த போதே செந்தில் பாலாஜியுடன் நெருக்கமாக இருந்த ஸ்ரீநிதியை, சிங்காநல்லூர் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக திமுக தலைமை மூலம் செல்வப்பெருந்தகையிடம் பேசி சீட் வாங்கிக் கொடுத்தார் செந்தில் பாலாஜி.

   

ஆனால், களத்தில் காங்கிரஸ் தொண்டர்களின் அதிருப்தியாலும், செந்தில் பாலாஜியின் அதிரடி தேர்தல் உத்திகள் எடுபடாததாலும் ஸ்ரீநிதி தேர்தலில் தோல்வியைத் தழுவினார். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான காரணங்களை ஆராய முன்னாள் எம்.பி. ஜெயக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட ஐவர் குழுவின் விசாரணை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. இந்த விசாரணையில் பங்கேற்ற ஸ்ரீநிதி, தனது தோல்விக்கு முழுக்க முழுக்க காங்கிரஸாரே காரணம் என்றும், திமுக மீதான வன்மத்தால் அவர்கள் தவெக-விற்கு வாக்களித்து தன்னைத் தோற்கடித்ததாகவும் கூறி கோவை மாவட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

   

ஸ்ரீநிதியின் இந்தப் புகாரை மறுத்த ஜெயக்குமார், அவர் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளை மதிக்காமல், திமுகவினர் வகுத்துக் கொடுத்த பாதையிலேயே பிரச்சாரம் செய்து அவர்களின் சொல்படி மட்டுமே நடந்துகொண்டதாகக் கடிந்துகொண்டார். இந்த காரசாரமான விசாரணைக்குப் பிறகே, காங்கிரஸில் தங்களுக்கு இனி எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்து, செந்தில் பாலாஜியின் இறுதி கட்ட யோசனைப்படி ஸ்ரீநிதி நேற்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் ஐக்கியமாகியுள்ளார். இந்த இணைப்பு, தேர்தல் முடிவடைந்த பின்னரும் கோவையில் திமுக மற்றும் காங்கிரஸிற்கு இடையேயான உள்ளடி அரசியலை அப்பட்டமாக வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.