தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கியிருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி, இவர்கள் இருவரும் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதன்படி, இன்று காலை சுமார் 10.30 மணியளவில் இருவரும் காவல் நிலையத்திற்கு வருகை தந்து, வழகின் புலன் விசாரணை அதிகாரியான (IO) காவல் ஆய்வாளர் ரஜனி முன்னிலையில் தங்கள் கையெழுத்தைப் பதிவு செய்தனர்.
ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இதுவரை 14 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கின் பின்னணியில் செந்தில் பாலாஜிக்கும் அவரது சகோதரருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையிலேயே, இருவரும் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை நாடினார்கள். நீதிமன்றம் அளித்த நிபந்தனையின் அடிப்படையில், முதற்கட்டமாக இன்று காலை இருவரும் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று தங்களது வருகையைப் பதிவு செய்துள்ளனர்.
கையெழுத்திட வந்த இடத்தில், செந்தில் பாலாஜியிடம் மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை மேற்கொண்டார். முன்ஜாமீனில் கையெழுத்திட வந்த முன்னாள் அமைச்சரிடம் துணை ஆணையர் திடீரென நேரில் விசாரணை நடத்திய சம்பவம், காவல் நிலைய வளாகத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாரணை முடிவடைந்தைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தனது சகோதரருடன் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
