அறிவாலயத்தின் ‘அவுட் ஆஃப் கவரேஜ்’… திமுகவில் இருந்து விலகுகிறாரா செந்தில் பாலாஜி?….டெல்லி தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை.. வெளியான பரபரப்பு தகவல்….!

By Nanthini on ஆவணி 13, 2026

Spread the love

அதிமுக ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினால் மிகக் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் செந்தில் பாலாஜி. ஆனால், அவர் திமுகவில் இணைந்த சில நாட்களிலேயே கட்சியின் மிக முக்கியமான அதிகார மையமாக உருவெடுத்தார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்தபோதும், இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர வைக்கும் அளவுக்கு திமுக தலைமைக்கு நெருக்கமாக இருந்தார். இருப்பினும், ஆட்சிக்குப் பிறகு ‘கரூர் கம்பெனி’ மீது அக்கட்சியின் உடன்பிறப்புகள் தரப்பில் இருந்து குவிந்த பல்வேறு புகார்களால் திமுக தலைமை மிகுந்த அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தனது நெருக்கடிகளுக்குத் தானே தீர்வு காண வேண்டும் என்ற முடிவுக்கு செந்தில் பாலாஜி வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செந்தில் பாலாஜி மீது போக்குவரத்துத் துறை வேலைவாய்ப்பு மோசடி, டாஸ்மாக் மதுபானக் கொள்முதல் முறைகேடு, சோலார் மின் இணைப்பு மற்றும் நிலக்கரி கொள்முதல் முறைகேடு எனப் பல்வேறு புகார்களும் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. தமிழக திமுக வரலாற்றில் எந்தவொரு மூத்த நிர்வாகி மீதும் இல்லாத அளவிற்கு மலைபோலக் குவிந்துள்ள இந்த வழக்குகள், கட்சியின் பிம்பத்திற்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. கரூர் கூட்ட நெரிசல் போன்ற விவகாரங்களும் திமுகவிற்கு எதிரான எதிர்வினைகளாக மாறியதால், தலைமைக்கும் அவருக்கும் இடையேயான இடைவெளி மேலும் அதிகரித்துள்ளது.

   

சமீபத்தில் திமுகவின் தேர்தல் தோல்விகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவிடம், மூத்த நிர்வாகிகள் பலர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது கரூர் ஆதரவாளர்கள் மீது சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதனால் அவர் மீதிருந்த நம்பிக்கையை திமுக தலைமை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தவெக எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகள் விஷயத்தில் திமுக அரசு பெரியளவில் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை என்ற ஆதங்கமும் செந்தில் பாலாஜி தரப்பிற்கு உருவாகியுள்ளது.

   

அறிவாலயத்தின் மனநிலையைப் புரிந்துகொண்ட செந்தில் பாலாஜியும் அவரது சகோதரரும், இனி திமுகவை நம்பியிருக்காமல் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள புதிய பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதன் பின்னணியில், மத்திய விசாரணை அமைப்புகளில் நிலுவையில் உள்ள வழக்குகளில் இருந்து நிவாரணம் பெற டெல்லி தலைவர்களுடன் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சென்னையில் இருந்தாலும் திமுக தலைவர்களின் சந்திப்புகளைத் தவிர்த்து, கட்சியின் தொடர்ப எல்லைக்கு வெளியே அவர் இயங்கி வருவதால், அவர் தொடர்ந்து திமுகவில் நீடிப்பாரா அல்லது டெல்லியை நோக்கி நகர்வாரா என்ற விவாதம் தமிழக அரசியலில் தீவிரமடைந்துள்ளது.