செங்கல் உருவிக் கிடக்குது… அண்ணாமலையை டவுசர் போட சொல்லுங்க… பங்கமாய் கலாய்த்த செந்தில் பாலாஜி..!!

By Soundarya on சித்திரை 12, 2026

Spread the love

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தீவிர வாக்கு சேகரிப்பின் இடையே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுகவின் தலைமை குறித்து பாஜகவினர் கவலைப்படத் தேவையில்லை என்றும், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாகப் பதவியேற்பது உறுதி என்றும் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார். பாஜக அடிக்கடி குறிப்பிடும் “இரட்டை இன்ஜின்” அரசுக்கு உதாரணமாகப் புதுச்சேரியைச் சுட்டிக்காட்டிய அவர், அங்குள்ள அவல நிலையே அந்த முழக்கத்தின் தோல்விக்குச் சாட்சி என்றார்.

ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்துப் பேசிய செந்தில் பாலாஜி, தமிழகத்திற்கு உரிய நிதி வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினார். “தமிழகம் ஒரு ரூபாய் வரியாகச் செலுத்தினால், ஒன்றிய அரசு வெறும் 29 பைசாவை மட்டுமே திருப்பித் தருகிறது; கல்விக்கும், 100 நாள் வேலைத் திட்டத்திற்கும் நிதியை ஒதுக்காமல் முட்டுக்கட்டை போடுகிறார்கள்” என்று சாடினார். தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழகத்தில் முகாமிட்டு, தமிழில் பேசி மக்களை ஏமாற்ற நினைக்கும் ஒன்றிய அமைச்சர்கள், தேர்தல் முடிந்ததும் தமிழகத்தைப் புறக்கணிப்பதே வாடிக்கையாக வைத்துள்ளனர் என்றார்.

   

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரின் தொடர் செய்தியாளர் சந்திப்புகள் திமுகவின் வெற்றியைப் பாதிக்காது என்று குறிப்பிட்ட அவர், முதல்வர் ஸ்டாலினுக்கு மக்களிடம் மாபெரும் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்தார். கடந்த காலங்களில் “அறிவாலயத்தின் செங்கல்லை உருவுவேன்” என்று பேசிய அண்ணாமலையை எள்ளி நகையாடிய செந்தில் பாலாஜி, “இப்போது அவரது செங்கல் தான் உருவிக் கிடக்கிறது; அவரை டவுசர் அணிந்து வேலை செய்யச் சொல்லுங்கள்” என மிகக் கடுமையான மற்றும் கிண்டலான வார்த்தைகளால் விமர்சித்தார்.