“ஓட்டுப் போடாம நல்லா சரக்கடிச்சுட்டு வீட்லயே தூங்குங்க” பரபரப்பை கிளப்பிய சீமான் பேச்சு..!!

By Soundarya on சித்திரை 12, 2026

Spread the love

கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபூபக்கர் சித்திக்கை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த 15 ஆண்டுகளாகத் தங்களது கட்சி களத்தில் நிற்பதாகவும், ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் அளிக்கும் ஆதரவு அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டினார். 2016-ல் 4.5 லட்சம் வாக்குகளில் தொடங்கி, 2024-ல் 36 லட்சம் வாக்குகள் பெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தங்களை மக்கள் வளர்த்தெடுத்துள்ளதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தற்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் 6,000 சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகக் கூறுவதை விமர்சித்த சீமான், திருமணங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்கள் கூட 60,000 சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் என்றும், இதனை ஒரு சேவையாகக் கருத முடியாது என்றும் எள்ளி நகையாடினார். மக்கள் ஜாதி, மதத்தைப் பார்த்து அரசியல் அதிகாரத்தைத் தேர்ந்தெடுத்தால் மனிதநேயம் அழிந்துவிடும் என்றும், அடிப்படை உரிமைகளுக்காகப் போராடாமல் வெறும் சடங்குகளில் பங்கேற்பவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

   

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துதான் வாக்குகளைப் பெற முடியும் என்ற நிலை இருந்திருந்தால், காமராஜர், கக்கன், காயிதே மில்லத் மற்றும் முத்துராமலிங்கத் தேவர் போன்ற மகத்தான தலைவர்கள் நமக்குக் கிடைத்திருக்க மாட்டார்கள் என்று அவர் எச்சரித்தார். ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்க்கு விலை போகாமல், நேர்மையான அரசியலைத் தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவர், வாக்களிக்க விருப்பமில்லை என்றால் குடித்துவிட்டு வீட்டிலேயே தூங்குங்கள், ஆனால் தவறானவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என ஆவேசமாகப் பேசினார்.