தவெக பேர வழக்கில் வழங்கப்பட்ட முன்ஜாமீன் நிபந்தனையின்படி, சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராவதிலிருந்து 6 நாட்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுடன் அவசர ஆலோசனை நடத்த வேண்டிய சூழல் நிலவுவதால், இந்த இடைக்கால விலக்கு தேவைப்படுவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், ஆகஸ்ட் 5-ஆம் தேதி கண்டிப்பாக நேரில் ஆஜராவேன் என்றும் உறுதியளித்துள்ளார். மேலும், இந்த குறிப்பிட்ட நாட்களில் நேரில் ஆஜராக இயலாது என்பது குறித்து திருவல்லிக்கேணி காவல் நிலைய அதிகாரிகளுக்கு ஏற்கனவே கடிதம் மூலம் தெரிவித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
