உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை சிருஷ்டி கண்டாரி என்பவருக்கு, செயலகப் பணியில் இருக்கும் சவுரப் கத்ரி என்பவருடன் கடந்த 2025 நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமான 8 மாதங்களிலேயே, சிருஷ்டி தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தனது முடிவை எடுக்கும் முன் அவர் வெளியிட்ட உருக்கமான வீடியோ பதிவில், “என்னை மன்னித்துவிடு அம்மா, என்னால் இதற்குமேல் இந்த வேதனையைத் தாங்க முடியவில்லை” எனக் கண்ணீருடன் பேசியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் வீட்டாரின் இடைவிடாத வரதட்சணைக் கொடுமையே இந்த முடிவுக்குக் காரணம் என்றும், சிருஷ்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். இருவருமே நல்ல அரசு வேலையில் இருந்தபோதிலும், வரதட்சணைப் பேராசையால் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை பரிதாபமாகப் பலியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், செயலக அதிகாரியான கணவன் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
