“ஒரே கல்லில் 2 மாங்காய்”… கோவையைத் தட்டித் தூக்க செந்தில் பாலாஜி போட்ட ‘மாஸ்’ ஸ்கெட்ச்…. ஆடிப்போன அரசியல் களம்….!

By Nanthini on மாசி 18, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் திமு‌கவின் செல்வாக்கை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் இரண்டு பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் ஆதிக்கத்தைத் தகர்த்து, திமுகவின் வெற்றியை உறுதி செய்வதே இந்த மாநாடுகளின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது. ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நிகழவுள்ள இந்த நிகழ்வுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

முதலாவதாக, வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் பகுதியில் திமுக மேற்கு மண்டல இளைஞரணி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். அன்றைய தினமே பொள்ளாச்சி பேருந்து நிலையத் திறப்பு உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

   

இதனைத் தொடர்ந்து, அதே வாரத்தில் பிப்ரவரி 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) செட்டிப்பாளையம் பகுதியில் மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்று தேர்தல் வியூகங்கள் குறித்து தொண்டர்களுக்கு உரையாற்றுகிறார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பெரியார் நூலகத்தையும் முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்.

   

இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளையும் வெற்றிகரமாக நடத்துவதற்கான பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னின்று கவனித்து வருகிறார். ஏற்கனவே அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில், திமுகவின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் களத்தில் எதிரணிகளுக்குப் சவாலாக அமையும் வகையில் செந்தில் பாலாஜி வகுத்துள்ள இந்த ‘மாஸ் பிளான்’ திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.