தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுக தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த சிறப்புப் பணிக் குழுவை அமைப்பது தொடர்பாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.
இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு மற்றும் கனிமொழி எம்.பி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் இடம்பெற வேண்டிய பிரதிநிதிகள் யார் என்பது குறித்தும், பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கலாம் என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் கேட்டு காங்கிரஸ் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் சூழலில், அதற்கு மாற்றாக திமுக எடுக்க வேண்டிய வியூகங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் இடைக்கால பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து, தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த நான்கு நாட்களில் திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, கூட்டணி கட்சிகளுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
